கோயில் பங்காளிகளின் வீடுகளில் ஒரு வருடம் யாரும் இறக்காமல் இருந்தால் அந்த வருடம் கரகம் பாலிக்கும் கோயில் திருவிழா நடைபெறும்.
அறுவடைகாலத்தை கணக்கில் கொண்டு திருவிழா தேதி கோயில் பங்காளிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
கோயில் திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாட படுகிறது.
முதல் நாள் இரவு தங்காள் பெரியக்கா அண்ணாவியார் மதுரை வீரன் மரளாளிகளை கோவிலுக்கு ஒவ்வொருவராக அவரவர்களின் வீடுகளிலிருந்து அழைத்து வரப்படுவார்கள். அனைத்து மரளாளிகள் கோவிலுக்கு வந்தவுடன் கோவிலில் வீரப்பூர் மேடையில் பூஜைகள் ஆரம்பித்து உடுக்கு அடிக்கும் பூசாரி மரளாளிகளுக்கு அருள் வரவழைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ( ஸ்ரீ தங்காள், பெரியக்கா, அண்ணாவியார், மதுரை வீரன் மற்றும் பூஜை கூடை தூக்கும் மரளாளிகளுக்கு அருள் வரவழைக்கும் நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும்.
கோவிலில் வீரப்பூர் மேடையில் பூஜைகள் ஆரம்பித்து உடுக்கு அடிக்கும் பூசாரி மரளாளிகளுக்கு அருள் வரவழைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
( ஸ்ரீ தங்காள், பெரியக்கா, அண்ணாவியார், மதுரை வீரன் மற்றும் பூஜை கூடை தூக்கும் மரளாளிகளுக்கு அருள் வரவழைக்கும் நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும்.
அருள் வரும் மரளாளிகள் தங்காள் மற்றும் பெரியக்கா மரளாளிகள் அவர்களுக்குரிய பெரம்புகளுடனும், அண்ணாவியார் அவருடைய ஆயுதம் வேல், மதுரை வீரன் அவருடைய ஆயுதம் அருவாள் மற்றும் பூசைக்குரிய சாமான் கள் அடங்கிய மூங்கில் கூடையை ஒரு மரளாளியும் தூக்கிக் கொண்டு அனஞ்சனூர் கிராமத்திலிருந்து உய்யகொண்டான் ஆற்றை குறுக்கே கடந்து பழையூர் மற்றும் பெருகமணி இரயில்வே லேவல் கிராசிங் வழியாக குறம்பு வாய்க்கால் வழியாக காவேரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள நீரோடைக்கு அருகில் மரளாளிகள் சென்றடைவார்கள். இவர்களுடன் ஊர்மக்களும் தொடர்ந்து செல்வார்கள்.
முன்னதாக அண்ணாவியார் மற்றும் மதுரைவீரன் மரளாளிகள் உய்யகொண்டான் கரையில் வீற்றிருக்கும் மாசான கருப்பு ஸ்வாமியை வலம் வந்து தங்காள் மற்றும் பெரியக்கா மரளாளிகளுக்கு பாதுகாப்பாக வழிநடத்தி காவேரி ஆற்றுக்கு கூட்டி செல்வார்கள்.
நள்ளிரவில் தங்காள் கரகம் மற்றும் பெரியக்கா கரகங்களில் காவேரி ஆற்றின் தீர்த்தத்தை கரகங்களில் நிறப்பப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும். மரளாளிகளுக்கு அவர்களுக்குரிய ஆடை ஆபரணங்கள் அணிவிக்கப்படும். பின் அந்த ஆற்றின் மணலிலேயே கரகங்கள், வேல், மற்றும் அருவாள் வைத்து இலைபோட்டு தேங்காய் வாழைப்பழம் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின் உடுக்கு அடிக்கும் பூசாரியால் அனைத்து மரளாளிகளுக்கும் அருள் வரவழைக்கப்பட்டு கரகங்களை தங்காள் மற்றும் பெரியக்காவின் தலையில் எடுத்து வைக்கப்படும்.
அண்ணாவியார் ஸ்வாமி வேல் உடனும், மதுரை வீரன் ஸ்வாமி அருவாளுடனும் வாணவேடிக்கைகள் முழங்க தப்பு மற்றும் மேளதாளங்கள் முழங்க காவேரியிலிருந்து மரளாளிகள் அண்ணாவியார் , மதுரைவீரன் ஸ்வாமியின் பாதுகாப்பில் கரகத்துடன் தங்காள் மற்றும் பெரியக்கா மரளாளிகள் அனஞ்சனூரை நோக்கி புறப்படுவார்கள்.
வரும் வழியில் பெருகமணி, பழையூர் ஊர்களில் பூஜைகள் வாங்கிக்கொண்டு மேளதாளங்கள், தங்காள் பெரியக்காவின் கரக நடனங்களுடனும் ஆட்டபாட்டங்களுடன் அனஞ்சனூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மற்றும் வீதிகளில் பூஜைகளை வாங்கிக்கொண்டு அருள் வாக்கினை வழங்கி விட்டு விடிவதற்குள் கோவிலுக்கு சென்றடைந்துவிடுவார்கள்.
கோவிலை சென்றடைந்தவுடன் தங்காள் பெரியக்கா கரகங்கள் பயபக்தியுடனும் மிக பாதுகாப்பாக கோவில் சன்னிதானத்தில் இறக்கிவைக்கப்படும். அதை தொடர்ந்து அண்ணாவியார் மற்றும் மதுரை வீரன் ஸ்வாமிகளின் ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று இறுதியாக அவர்களின் ஆயுதங்கள் அந்த அந்த சன்னிதானத்தில் வைக்கப்படும்.
திருவிழாவின் அடுத்த நிகழ்ச்சியாக காதணிவிழா அண்ணாவியார் சன்னதியில் அண்ணாவியார் ஸ்வாமியின் ஆசியுடன் குழந்தைகளுக்கு பூ மற்றும் மஞ்சள் நீர் தெளித்து தலைமுடி இறக்கப்படும். பின் அவரவர்கள் மாமன் மைத்துனர்களின் சீர்வரிசை தட்டுகளுடன் அண்ணாவியார் ஸ்வாமி சன்னதியில் காது குத்தப்படும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அதன் பின் எல்லா ஸ்வாமிகளுக்கும் தீபாரதனை காட்டப்பட்டு விழாவின் ஒரு பகுதி நிறைவடைகிறது.
மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீ தங்காள் , பெரியக்கா, அண்ணாவியார், மதுரை வீரன் ஸ்வாமிகளுக்கு சந்தனகாப்பு மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஊரின் பொது பூஜை வெகு விமரிசையாக நடைபெற்று அனைவருக்கும் கோவில் பிரசதங்கள் வழங்கப்படும்.
மறுநாள் காலை 11.00 மணிக்கு மேல் தப்பு தாளங்களுடன் கோவிலிருந்து ஆரம்பித்து ஊரின் வீதிகளில் திருமஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்று இறுதியாக கோவிலை மரளாளிகள் புடை சூழ சென்றடையும். இறுதி நிகழ்ச்சியாக மரளாளிகளை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு வருதல் நிகழ்ச்சியுடன் திருவிழா வைபவங்கள் நிறைவடைகின்றன.
Designed & Maintained byGlobal Soft Solutions