logo







ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் கோவிலின் வரலாறு மற்றும் பூஜை, திருவிழா, தலைக்கட்டுகள் போன்ற விபரங்களை நடப்பு மற்றும் அடுத்த தலைமுறைகள் அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு ஆன்மீக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். மேலும் தங்களுக்கு தெரிந்த இந்த கோவில் பற்றிய உண்மையான தகவல்கள் தெரிந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.



ஸ்தல வரலாறு :


கைலாய மலையின் வடபுறத்தில் விளங்கும் நாகமலையில் உள்ள அழகிய தாமரைப் பொய்கையில் வாழ்ந்து வந்த ஐந்து தலை நாகம் ஒன்று தனக்கு பிள்ளை வரம் வேண்டி சிவனை நினைத்து கடும் தவமிருந்தது. நாகத்தின் மனகவலையை தீர்த்து அருள் புரிய வேண்டும் என உலகநாயகியான பரமேஸ்வரி சிவபெருமானிடம் கூறினாள். நாகத்தின் மனக்கவலை நீங்க வேண்டுமாயின் நம்மில் ஒருவர் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்றார் சிவபெருமான்.உடனே உமையவள் நான் சென்று நாகத்தின் மகளாகப் பிறந்து மனக்கவலையை போக்குகிறேன் என்றாள். சிவனார் மனம் குளிர்ந்து உமையம்மையை அனுப்பி அருள் புரிந்தார்.



நாகத்திற்கு குழந்தையாக உமையாள் சென்று பிறந்தாள். பெரியக்காண்டி என்ற பெயருடன் உமையவளான ஈஸ்வரி நாகமலையில் வளர்ந்தாள். சிவச்சின்னங்களை அணிந்து கொண்டு விதிப்படி சிவபூசையை செய்து வந்தாள். மனம் மகிழ்ந்த ஈசன், ஓர் ஓலையை எழுதி அவள் முன்பு வைத்துவிட்டு மறைந்தார். ஓலையில், " இங்கு நீ தவம் செய்தால் ஈடேற்றம் இல்லை. தென்னாட்டில் மந்திர வலிமை பெற்ற தமிழ்மொழி பேசும் தமிழகம் சென்று அங்குள்ள வீரமலையில் உள்ள வெண்முடியில் தவமிருப்பாய். அவ்வாறு நீ தவமிருக்கும் காலத்தில் வளநாட்டுக் காராளன் குன்றுடையான் மைந்தரில்லை என்று மனக்கவலை கொண்டு சிதம்பரத்திற்கு வந்து நம்மிடம் நம்மிடம் வரம்பெறுவான். அவ்வாறு பெற்ற வரத்தால் பொன்னர், சங்கர் என்று இரண்டு ஆண்களும் அருக்காணி என்ற பெண் மகளும் அவனுக்கு பிறப்பார்கள். 16 வயது மட்டும் ஆயூட் காலம் கொண்ட பொன்னர், சங்கர் சத்தியப்படைபோர் செய்து நீ தவமிருக்கும் நாகமலையில் படுகளமாவர். அவர்களுடன் பிறந்த பொற்கொடியாள் தன் அண்ணன்மாரை தேடி வீரமலைக்கு வருவாள். அவள் வீரமலை வெண்முடிக்கு வரும் போது உன்னுடைய தவம் முடிவுக்கு வரும். அவர்களால் அந்த மண் பூசைக்கிடமாகும்" என்று எழுதியிருந்தது.



அவ்வாறே, தாயார் சப்தகன்னியர்களுடன் நாகமலையை விட்டு புறப்பட்டு வீரமலை வெண்முடி வந்து சேர்ந்தாள். அங்கு அரனை நினைத்து பூசை செய்து வந்த பெரியக்காண்டியின் தவம் பொன்னர், சங்கர் படுகளம் தேடி வந்த தங்காளின் வரவால் இனிதே நிறைவடைந்தது. பெரியக்காண்டி, தங்காள் அண்ணன்மார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கைலாயம் சென்றடைந்தார். அவர்கள் வாழ்ந்த வீரப்பூர் பூசைக்கிடமானது. வீரப்பூரிலிருந்து பொன்னர் மற்றும் சங்கரின் சந்ததியினர் ஒரு பிடி மண் அங்கிருந்து எடுத்துப் போய் நமது தென்னகத்தில் பல இடங்களில் ஆலயம் அமைத்து வழிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு அமைந்த ஆலயங்களில் ஒன்றுதான் நமது " அனஞ்சனூர்" ஸ்ரீ தங்காள் ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் ஆலயமாகும்.



காணும் இடமெல்லாம் கழனி வயலோடு கவின் மிகு காட்சி தரும் அழகிய " அனஞ்சனூர்: நல்லூரின் ஞான திசையாம் தென்பாகம் அமைந்து அருளாட்சி செய்து வரும் ஸ்ரீ தங்காள், ஸ்ரீ பெரியக்காண்டி அம்மன் மற்றும் ஸ்ரீ அண்ணாவியார், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ மாசான கருப்பு, ஸ்ரீ பொன்னர், ஸ்ரீ சங்கர், ஸ்ரீ அத்தைபிள்ளை அத்தான், ஸ்ரீ அருமை பெருமாள், ஸ்ரீ வீரபோகர், ஸ்ரீ பேச்சி அம்மன்,ஸ்ரீ சடைச்சி அம்மன், ஸ்ரீ ஆண்டிச்சி அம்மன், வீரப்பூர் மேடை என உருவ, அருவ, அரு உருவ என்று சைவ சமயத்தின் மும்முறை வழிபாட்டு நெறிகளையும் முறையாக பெற்ற நமது இவ்வாலயம்.





Designed & Maintained byGlobal Soft Solutions